சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை நினைவு கூர்ந்து, அவரது துணிச்சலும் தேசபக்தியும் மக்களுக்கு என்றென்றும் உத்வேகம் அளிக்கும் என்று தெரிவித்தார்.
சமூக வலைதளப் பதிவில், சாவர்க்கரின் அறிவுத்திறனை குறிப்பிட்ட மோடி, சமூக சீர்திருத்தத்திற்கு அவர் அளித்த முக்கியத்துவமும் குறிப்பிடத்தக்கது என கூறினார்.
இந்நாளை முன்னிட்டு பல தலைவர்கள் சமூக வலைதளங்களில் மரியாதை செலுத்தினர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சாவர்க்கர் தனது வாழ்நாளை தாய்நாட்டுச் சேவைக்காக அர்ப்பணித்தார் என்றும், தீண்டாமை போன்ற சமூகத் தீமைகளை வன்மையாக எதிர்த்தார் என்றும் கூறி, அவரது அர்ப்பணிப்பு அனைவருக்கும் வழிகாட்டி என தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சாவர்க்கர் தேசியவாத சிந்தனையாளராக மட்டுமல்லாமல் ஆற்றல்மிக்க பேச்சாளர், கவிஞர், தத்துவஞானியாகவும் திகழ்ந்தார் என்றும், பல இன்னல்களைத் தாங்கி இந்தியாவின் சுதந்திரத்திற்காக வாழ்நாளை அர்ப்பணித்தார் என்றும் கூறினார்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நாட்டின் சுதந்திரத்திற்காக மனிதாபிமானமற்ற சித்திரவதைகளையும் தாங்கியவர் சாவர்க்கர் என கூறி, அவரது போராட்ட வாழ்க்கை, துணிவு மற்றும் தேச நலனுக்கான அர்ப்பணிப்பு என்றும் நினைவில் நிலைக்கும் என்று தெரிவித்தார்.





