நிலவில் மனிதர்கள் குடியேற்றம் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்க, நிரந்தர ஆய்வு தளம் அமைக்கும் மூன்று கட்ட திட்டத்தை அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா அறிவித்துள்ளது.

இதற்கு முன் ஆர்ட்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவைச் சுற்றி பயணம் செய்தனர். 54 ஆண்டுகளுக்குப் பின் நிலவை நெருங்கிச் சென்ற முக்கிய முயற்சியாக இது குறிப்பிடப்படுகிறது.

புதிய திட்டத்தின் கீழ், நிலவின் மேற்பரப்பில் ரோவர்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட மேம்பட்ட உபகரணங்களுடன் கூடிய நிரந்தர தளம் அமைக்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது. ரோவர்கள் என்பது கேமராக்கள், சென்சார்கள் மற்றும் கற்கள், மணல் சேகரிக்க உதவும் இயந்திரக் கைகள் கொண்ட வாகனங்கள்; ட்ரோன்கள் என்பது ஆளில்லா சிறிய விமானங்கள்.

நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் கூறுகையில், இந்த ஆய்வு தளம் மனிதகுலத்தின் முதல் நிரந்தர “வெளி உலக” தளமாக இருக்கும் என்றும், நிலவின் கடுமையான சூழலில் மனிதர்கள் எப்படி வாழ்ந்து செயல்பட முடியும் என்பதை அறிய இது உதவும் என்றும் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்காக சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 2028-ல் சந்திரனில் விண்வெளி வீரர்களை இறக்கி விடுவது இலக்கு என்றும் நாசா கூறியுள்ளது. அதற்கான முன்னோட்டமாக, இந்த ஆண்டே மூன்று விண்கலங்களை அனுப்பி தொழில்நுட்பங்களை சோதித்து, எதிர்கால மனிதப் பயணங்களுக்கு அடித்தளம் அமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.