புதுடில்லி: நாடு முழுவதும் கடும் கோடை வெப்பம் நிலவுவதால், மக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருந்து அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
தமிழகம், டில்லி, உத்தரப் பிரதேசம், ஒடிஷா உள்ளிட்ட பல மாநிலங்களில் வெப்ப அலை தாக்கம் அதிகரித்துள்ளது. பல நகரங்களில் 45 டிகிரி செல்ஷியசுக்கும் மேல் வெப்பநிலை பதிவாகி, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், வெப்பநிலை தொடர்ந்து உயர்வதால் அன்றாட வாழ்க்கையில் சிரமங்கள் ஏற்படுகின்றன என்று குறிப்பிட்டார். வெளியில் செல்லும்போது தண்ணீரை உடன் எடுத்துச் செல்லவும், உடல் வறண்டு விடாமல் பார்த்துக் கொள்ளவும், தண்ணீர் பருகும் அளவை அதிகரிக்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தலைச்சுற்றல், வாந்தி, கடுமையான சோர்வு போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும், நேரத்தில் கவனிக்காவிட்டால் வெப்ப வாதம் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்தார். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெயிலில் வேலை செய்பவர்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதால் அவர்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றார்.
மேலும், இந்த கொளுத்தும் வெயிலில் விலங்குகள் மற்றும் பறவைகளையும் மறக்கக் கூடாது என்று கூறிய அவர், வீட்டு மொட்டை மாடி, பால்கனி மற்றும் அலுவலகங்கள் வெளியே சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து உதவலாம் என தெரிவித்தார்.





