ரேஷன் கடைகளுக்கு தரமான அரிசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்தார்.
செங்கல்பட்டு அருகே திம்மாவரம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக (TNCSC) வளாகத்தை அவர் ஆய்வு செய்தார். ஆய்வில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன், எம்.எல்.ஏ. தியாகராஜன், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மலர்விழி, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உள்ளிட்டோர் மற்றும் TNCSC உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், தினமும் 100 டன் அரவை செய்யும் திறன் கொண்ட நவீன ஆலையில் ஊழியர் பற்றாக்குறையால் தற்போது 30 டன் மட்டுமே அரவை நடைபெறுகிறது என்று தெரிவித்தனர். திறனுக்கு ஏற்ற அளவில் பணியாளர்களை நியமிக்கவும், ஓய்வு அறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் கோரிக்கை வைத்தனர்.
மேலும், மாவட்டத்தில் 171 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருவதாகவும், தினமும் 153 லாரிகள் மூலம் நெல் மூட்டைகள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரவை மில்களுக்கு அனுப்பப்படுவதாகவும் தெரிவித்தனர். கொள்முதல் நிலையங்களில் தினசரி லாரி இயக்கத்தை அதிகரித்தால் தேக்கம் தவிர்க்கலாம் என்றும் கூறினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், நவீன ஆலையில் தினசரி 100 டன் அரவை நடைபெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை சேமிக்க நெல் குடோன்கள் அமைக்கப்படும் என்றும், ரேஷன் கடைகளுக்கு தரமான அரிசி வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.





