சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தும் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய அரசு, மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. இணைப்பு பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் ஜூலை 1 முதல் மும்மொழி கற்றல் கட்டாயம் என சமீபத்தில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு மொழியை விரும்புவோர் அதை மூன்றாவது மொழியாக தேர்வு செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மூன்றாவது மொழிக்காக 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படாது என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் (நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, விபுல் எம். பஞ்சோலி) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், மத்திய அரசு, சி.பி.எஸ்.இ., என்.சி.இ.ஆர்.டி. ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

மேலும், புதிய கொள்கையை நடைமுறைப்படுத்த சி.பி.எஸ்.இ.யின் உள்கட்டமைப்பு மற்றும் தயார்நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்திக்கு உத்தரவிட்டு, வழக்கை ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்தது.