கோவை: சூலூர் சிறுமி கொலை வழக்கை எடுத்துக்காட்டாகக் கொண்டு, முக்கிய வழக்குகளின் விசாரணையில் எஸ்.பி., ஐ.ஜி. போன்ற உயர் அதிகாரிகள் நேரடியாக களத்தில் இறங்கி தலையீடு செய்ய வேண்டும் என ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தமிழக அரசை வலியுறுத்தினார். பாலியல் சார்ந்த குற்றங்களில் பெண் அதிகாரிகளே விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தடயவியல் முடிவுகள் தாமதமாக வருவதால் விசாரணைகள் பாதிக்கப்படுகின்றன என்றார். தற்போது டி.என்.ஏ. பரிசோதனை பெரும்பாலும் சென்னை மையமாக இருப்பதால் பல வழக்குகளில் அறிக்கைகள் தாமதமாகி, விசாரணை முன்னேற்றம் மந்தமாகிறது; அதனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்த டி.என்.ஏ. ஆய்வகம் அவசியம் என வலியுறுத்தினார்.
தண்டனைகள் விரைவாக கிடைக்க குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் என்றும், எஸ்.பி. அந்தஸ்திற்கு மேல் உள்ள அதிகாரிகள் நேரடியாக புலனாய்வில் ஈடுபட்டால் விசாரணை விரைவாக முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற வழக்குகளை நேரடியாக விசாரிக்க “சிங்கப்பெண்” படைக்கு நியமிக்கப்பட்ட பெண் அதிகாரி வராதது சரியல்ல என்றும் விமர்சித்தார்.
புலனாய்வு செலவினங்களுக்கு நிதி வழங்குவதில் பழைய நடைமுறை தொடர்வதாகக் கூறிய அவர், ஒவ்வொரு முறையும் உயர் அதிகாரி ஒப்புதல் பெற்று கேட்டு வாங்க வேண்டிய நிலை மாற்றப்பட வேண்டும் என்றார். அந்தந்த காவல் நிலையக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி அனுப்பி, மேலதிகாரிகள் கண்காணிப்பை உறுதி செய்யலாம் என்றும் தெரிவித்தார். மேலும், இவ்வகை வழக்குகளை விசாரிக்கும் போலீசாரை குறிப்பிட்ட காலத்திற்கு பிற பணிகளில் இருந்து விடுவிப்பதும் அவசியம் என்றார்.
பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்கள் அரசு வக்கீலை மட்டும் சார்ந்திருக்காமல், சட்டப்படி தங்களுக்கு தேவையான தனி வக்கீலை நியமிக்க உரிமை வழங்கி, அதற்கான கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறினார். உணர்ச்சி சார்ந்த வழக்குகளில் அதிகாரிகளின் செயல்பாடுகளை முதல்வர் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், ஊழலை அனுமதிக்க மாட்டேன் என்ற முதல்வரின் வெளிப்படையான நிலைப்பாடு வரவேற்கத்தக்கது; அரசின் செயல்பாடுகளை மதிப்பிட ஓராண்டு அவகாசம் அளித்த பின்னரே கருத்து சொல்ல முடியும் என்றும் அவர் கூறினார்.





