கட்சி மேலிடத்தின் கோரிக்கையின்பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா புதன்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். பெங்களூருவில் உள்ள ராஜ்பவனில் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கினார்.

ஆளுநர் தாவர்சந்த் கெலாட் சொந்த மாநிலத்திற்கு சென்றிருந்ததால், அவரது சிறப்பு செயலர் பிரபு சங்கர் ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023 சட்டசபைத் தேர்தலில் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தலைமையில் 135 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பின்னர், முதல்வர் பதவி தொடர்பான மாற்றம் குறித்து நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்தது. சித்தராமையா மற்றும் சிவக்குமார் இடையே போட்டி நிலவிய நிலையில், பின்னர் சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் டில்லியில் மேலிட தலைவர்கள் இருவருடனும் நீண்ட நேர ஆலோசனை நடத்தினர்; ராகுல் காந்தியுடன் நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு சித்தராமையா பதவியை விட்டு விலக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இன்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், டிகே சிவக்குமார் முதல்வராக வருவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனைத் தொடர்ந்து பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் ராம்நகர், கனகபுரா, சென்னப்பட்டணா, மாகடி உள்ளிட்ட பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.