பெங்களூரு

காங்கிரஸ் மேலிடம் கேட்டுக் கொண்டதையடுத்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். காலை 10:30 மணிக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2023 சட்டசபை தேர்தலில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் 135 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. அதன்பின் முதல்வர் பதவிக்கான போட்டி சித்தராமையா–சிவகுமார் இடையே உருவான நிலையில், சித்தராமையா முதல்வராகவும் சிவகுமார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.

இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்ற புரிதல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், சித்தராமையா பதவியேற்று மூன்று ஆண்டுகள் கடந்ததால் அவர் ஒப்பந்தப்படி விலகுவாரா என்ற குழப்பம் நீடித்தது.

இந்த நிலையில் டில்லியில் சித்தராமையா மற்றும் சிவகுமாருடன் மேலிட தலைவர்கள் சுமார் ஏழு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். ராகுல் காந்தியுடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு, முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க சித்தராமையா முன்வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கவர்னரை சந்திப்பதற்கு முன், அமைச்சர்களுக்கு தனது இல்லத்தில் காலை உணவு விருந்து அளிக்கிறார்; இதில் சிவகுமாரும் பங்கேற்கிறார் என கூறப்படுகிறது. விருந்து முடிந்ததும் அமைச்சர்கள் புடைசூழ ராஜ்பவனுக்கு சென்று சித்தராமையா அதிகாரப்பூர்வமாக ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளார்.