தேர்தல் கமிஷன் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) சட்டப்படி செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த வேண்டிய அரசியல் சாசனக் கடமையுடன் இந்த நடவடிக்கை நேரடியாக தொடர்புடையது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
பீஹார் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக நடந்த எஸ்.ஐ.ஆர். பணியில் சுமார் 65 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர் மேற்கு வங்கம், தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட தேர்தல் நடைபெறவிருந்த மாநிலங்களிலும் இதேபோன்ற திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு, அரசியல் சாசனத்தின் 324வது பிரிவு தேர்தல் கமிஷனுக்கு தேவையான நேரத்தில் இத்தகைய சிறப்பு திருத்தத்தை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கிறது எனத் தெரிவித்தது. ஜனநாயகத்தின் நம்பகத்தன்மை என்பது வாக்குப்பதிவு மட்டுமல்ல; வாக்காளர் பட்டியலின் துல்லியம், நம்பகத்தன்மை, துாய்மை ஆகியவற்றிலும் அடங்கியுள்ளது என்றும் கூறியது.
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை அதிகார வரம்பை மீறியதா, நடைமுறை சட்டப்பூர்வமாக நியாயமானதா, 1950ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் விதிகளை மீறுகிறதா என்ற கோணங்களில் வழக்கை ஆய்வு செய்ததாக நீதிமன்றம் தெரிவித்தது. அதன் அடிப்படையில், சட்டம் மற்றும் விதிகளை மீறி இந்தப் பணி மேற்கொள்ளப்படவில்லை என முடிவெடுத்தது.
மேலும், அதிவேக நகரமயமாக்கல் மற்றும் இடப்பெயர்வு காரணமாக இரட்டைப் பதிவுகள் மற்றும் குளறுபடிகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பட்டியலின் துாய்மையை பாதுகாக்க இத்தகைய நடவடிக்கை அவசியம் என்ற தேர்தல் கமிஷனின் வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கத் தகுதியை பரிசீலிக்கும் போது குடியுரிமை தொடர்பான அம்சங்களை ஆராய தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இருப்பதாகவும், ஆனால் பெயர் நீக்கம் போன்ற எதிர்மறை முடிவுகள் ஒருவரின் குடியுரிமையை இறுதியாக தீர்மானிக்கும் சான்றாகாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.





