கொல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் எம்பி ககோலி கோஷ் தஸ்திதார், கட்சியில் வகித்த மாவட்ட பொறுப்பாளர், மகளிர் அணி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
இதனுடன் தொடர்பாக, லோக்சபாவில் திரிணமுல் எம்பியும் கொறடாவுமான கல்யாண் பானர்ஜி தன்னிடம் வெறுப்புடன் நடந்து கொண்டு அவமதித்ததாகக் கூறி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அவர் எழுத்துப்பூர்வமாக புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
பார்லிமென்டில் நடந்துகொண்ட விதமும் பயன்படுத்திய வார்த்தைகளும் பெண்ணான தன் மனதை புண்படுத்தும் வகையிலும் அவமானப்படுத்தும் வகையிலும் இருந்ததாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். கல்யாண் பானர்ஜி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் சமீபத்திய சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் சூழல் பரபரப்பாக உள்ள நிலையில், சில திரிணமுல் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் பாஜவில் இணையத் தயாராக இருப்பதாக கூறப்பட்ட தகவல்களும் கட்சிக்குள் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





