ஊரக வளர்ச்சி துறை மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளும் முறையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, அந்த பதிவு பென் டிரைவில் சேமிக்கப்பட்ட பின்னரே பில் தொகை வழங்கப்பட வேண்டும் என்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆனந்த் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் நடைபெற்ற துறை ஆய்வு கூட்டத்தில் வெளியிடப்பட்டது. கூட்டத்திற்கு அமைச்சர் ஆனந்த் தலைமை வகித்தார். துறை செயலர் பிரசாந்த் வடனேரே, கமிஷனர் பொன்னையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர், ஊரக குடியிருப்பு திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு/வேலை உறுதி திட்டம், சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுமானம், ஜல்ஜீவன் மிஷன், தூய்மை பாரதம் உள்ளிட்ட பல திட்டங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார். இத்திட்டங்கள் மூலம் ஊரக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
பணிகளில் சுணக்கம் இல்லாமல் செயல்பட்டு, தரத்தில் எந்தக் குறையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், பணிகளை காலக்கெடுவுக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சாலைகள் மற்றும் பாலங்களின் தரத்தில் சமரசம் செய்யக் கூடாது என்றும், வேலை உறுதி திட்டத்தின் ஊதியம் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பணிகள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்து பென் டிரைவில் சேமித்ததை உறுதி செய்த பிறகே பில் தொகை பட்டுவாடா செய்ய வேண்டும் என அவர் கூறினார்.





