தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டண விவரங்களை, சம்பந்தப்பட்ட பள்ளி இணையதளத்திலும் பள்ளி நுழைவாயிலிலும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வெளியிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைக்கு தமிழக மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் சேரன் நகரைச் சேர்ந்த லியாகத் அலி, 2022 அக்டோபரில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அரசு வழிகாட்டுதலின்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்கள் குறித்து தகவல் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், அதிகாரிகள் தகவலை வழங்காமல் மனுவை துறைகளுக்கு இடையே மாற்றி மாற்றி அனுப்பி காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் மேல்முறையீடு செய்த நிலையில், மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில், மனுதாரர் கேட்ட முழுமையான தகவல்களை தயாரித்து, இரண்டு வாரங்களுக்குள் கட்டணமின்றி விரைவு தபால் மூலம் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழங்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார், சி.பி.எஸ்.இ. மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரங்களை வகுப்பு வாரியாக பிரித்து, பொதுமக்கள் கேட்காமலேயே பள்ளி நுழைவாயில் விளம்பர பலகை, பள்ளி இணையதளம் மற்றும் சேர்க்கை விண்ணப்பப் படிவங்களில் கட்டாயமாக அச்சடித்து வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பதை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் ஆய்வு செய்து, உறுதிப்படுத்திய விவர அறிக்கையை வரும் ஜூன் 15ம் தேதி ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.