சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்தித்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினரிடையேயான சமரசம் முடிவுக்கு வந்து மீண்டும் ஒன்றிணைவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற அணுகுமுறையில் பிரச்சினைகள் ஒதுக்கப்பட்டதாகவும், திரும்பி வரும் அனைவரையும் அரவணைத்து செல்ல பழனிசாமி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர் தோல்விகளுக்குப் பிறகு பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அணியமைத்ததாகவும், அதில் சேர்ந்த வேலுமணி பின்னர் அந்த அணியை த.வெ.க. ஆதரவு போக்காக மாற்றியதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன. பின்னர் வேலுமணி அணியில் இருந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வுக்கு சென்றதும், ஐந்து எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி அணிக்கு திரும்பியதும் அந்த அணியின் பலத்தை குறைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சமாதான பேச்சுவார்த்தை தொடங்கியது. மே 26 மாலை முன்னாள் அமைச்சர்கள் விஸ்வநாதன், தங்கமணி ஆகியோர் தூதர்களாக பழனிசாமியை சந்தித்து பேசினர். அப்போது தலைமை கழகத்தில் உடனடி பதவிகள் வழங்கப்படும் என்றும், கட்சி மாவட்டங்களை பிரித்து மாவட்டச் செயலர் பதவிகள் வழங்கப்படும் என்றும் பழனிசாமி உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

மே 27 அன்று, முதலில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள சண்முகம் அலுவலகத்தில் கூடிய பின்னர், வேலுமணி தலைமையில் 13 எம்.எல்.ஏ.க்கள் மதியம் 12:10 மணிக்கு பழனிசாமியின் இல்லத்தில் சந்தித்தனர். சண்முகம் மீண்டும் இணைவதில் விருப்பமில்லை என்பதால் அவரைத் தவிர்த்து சந்திப்பு நடந்ததாகவும், பழனிசாமி தலைமையை ஏற்று அவரது உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவதாக உறுதி அளிக்கும் கடிதம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் செல்லாமல் நேரடியாக தலைமை செயலகத்துக்கு சென்றதாகவும், சண்முகம் பாலவாக்கம் இல்லத்துக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. சந்திப்புக்குப் பிறகு வேலுமணி தரப்பினர் தலைமை செயலகம் சென்று சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். இதற்கிடையில் தங்கமணி சண்முகத்தை சந்தித்து மீண்டும் எம்.ஆர்.சி. நகருக்கு அழைத்து வந்ததாகவும், அவருடன் சமாதான பேச்சு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.