புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் சந்தித்த பிறகு முதல்வர் விஜய் தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை டில்லி சென்ற விஜய், பிரதமர் மோடியையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேசினார்.
புதன்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், விஜய் தமிழகம் திரும்பினார்.
இதையடுத்து வெளியிட்ட அறிக்கையில், விஜய் தன்னை அழைத்ததாகவும், இருவரும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டதாகவும் சுரேஷ் கோபி கூறினார். நாட்டின் முன்னேற்றத்துக்கும், தமிழகம் மற்றும் கேரளத்தின் வளர்ச்சிக்கும் இணைந்து பணியாற்றும் உறுதிப்பாட்டை இருவரும் வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
ஒற்றுமையுடன் இணைந்து வலிமை பெறுவோம் என்ற கருத்தையும் அவர்கள் மீண்டும் வலியுறுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





