தமிழக முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற விஜய், டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கக் கோரி மனு அளித்தார்.

இரு நாள் பயணமாக டில்லி வந்த அவர், சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். தலைமைச் செயலர் சாய்குமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் வரவேற்ற நிலையில், பிரதமரை சந்திப்பதற்கு முன் நிதி கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் அவருக்கு விளக்கமளித்தனர்.

பிரதமர் அலுவலகத்தில் மாலை 4:20 முதல் 4:41 வரை நடந்த சந்திப்பில், முதல்வர் விஜய் பிரதமருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கினார். தொடர்ந்து தமிழக நலத் திட்டங்கள் மற்றும் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கை மனுவை பிரதமரிடம் வழங்கினார். இந்த சந்திப்பில் தலைமைச் செயலர் மட்டும் உடனிருந்தார்.

இந்த சந்திப்பில் பரந்தூர் விமான நிலையம், பி.எம். ஸ்ரீ திட்டம், காட்டுப்பள்ளி துறைமுகம் உள்ளிட்ட விவகாரங்களும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்பிய முதல்வர் விஜய், நிதியமைச்சகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நிலுவை நிதி, ஜி.எஸ்.டி. பகிர்வு, நெல் அரவை மானியம், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், மெட்ரோ, ஜல் ஜீவன், சமஷர சிக்‌ஷா அபியான் உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை விரிவாக எடுத்துரைத்தார்.

இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதாக இருந்த திட்டம், முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட பணிகள் காரணமாக நடைபெறவில்லை. விரைவில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.