தமிழக பல்கலைகளின் வேந்தர் பதவி முதல்வரா அல்லது ஆளுநரா என்ற விவகாரத்தில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம் வெளியிட்டுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்கலைகளின் வேந்தர் தொடர்பாக தி.மு.க. முன்வைக்கும் நிலைப்பாட்டை தங்கள் தரப்பு கட்டாயமாக பின்பற்ற வேண்டியதில்லை என கூறினார். மேலும், இதுகுறித்த கொள்கை முடிவை முதல்வர் விஜய் உரிய நேரத்தில் எடுப்பார்; விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
அதே பேட்டியில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்காக “ஒரு செங்கல்லை கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்” என கூறிய அவர், இந்த விவகாரத்தில் தமிழக முதல்வரின் நிலைப்பாட்டுடன் தமிழக காங்கிரஸ் உறுதியாக நிற்கும் என்றும் தெரிவித்தார்.
அவரது கருத்துகளுக்கு கண்டனம் எழுந்த நிலையில், வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் வேந்தராக பொறுப்பேற்பது குறித்து கேள்வி எழுந்தபோது, உரிய நேரத்தில் முதல்வர் கொள்கை முடிவு எடுப்பார்” என்றே கூறினேன் என விளக்கினார். தற்போதைய நிலை குறித்து நான் எந்த கருத்தும் கூறாதபோது, அதற்கு மாறாக திரித்து செய்தி வெளியானதை மறுக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், தனது கருத்து மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் இருந்ததாக கூறுவது அரசியல் உள்நோக்கத்துடன் செய்யப்படும் செயல் எனவும் அவர் தெரிவித்தார்.





