ஆசிய சாம்பியன்ஷிப் தகுதி போட்டியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்க டில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.

31 வயதான வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பிக் 2024 இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் கூடுதல் எடை காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் ஓய்வு அறிவித்த அவர், அந்த முடிவை திரும்பப் பெற்று மீண்டும் போட்டிகளில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தார். செப். 19 முதல் அக். 4 வரை நடைபெற உள்ள ஆசிய விளையாட்டை முன்னிட்டு, உ.பி. மாநிலம் கோண்டாவில் நடந்த சீனியர் ரேங்கிங் தொடரில் 57 கிலோ பிரிவில் களமிறங்கவும் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், ஓய்விலிருந்து மீண்டும் போட்டிக்கு திரும்புவதற்கான விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை எனக் கூறி, WFI வினேஷ் போகத்திற்கு ஜூன் 26 வரை தடையிட்டது. இதை எதிர்த்து அவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, வினேஷ் போகத் தேர்வு/தகுதி போட்டியில் பங்கேற்க தகுதியுள்ளதாகக் கூறி அனுமதி வழங்கியது. தாய்மை காரணமாக வீராங்கனைகளை தேர்வில் இருந்து விலக்கக் கூடாது என்றும், சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் வினேஷ் தரப்பில் தவறு இல்லை என கூறியிருந்ததை நீதிமன்றம் குறிப்பிட்டது. இதன் அடிப்படையில் மே 30ல் நடைபெற உள்ள தகுதி போட்டியில் அவர் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து WFI தற்போது சுப்ரீம்கோர்ட்டை அணுகியுள்ளது. நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை மே 29ல் விசாரிக்க உள்ளது.