பீஜிங்: சீன அதிபர் ஷீ ஜின்பிங் 2013ல் புகையிலை விற்பனைக் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதாக அறிவித்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், உலக சிகரெட் நுகர்வில் சீனா இன்னும் ஆதிக்கம் செலுத்துவதாக தரவுகள் கூறுகின்றன.
சீன சுகாதாரத் துறையின் முன்னாள் அதிகாரிகள் நடத்தும் தன்னார்வ அமைப்பின் அறிக்கைகள் மற்றும் பீஜிங்கைச் சேர்ந்த சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதார பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜெங் ரோங்கின் தரவுகளை தொகுத்து, அமெரிக்க பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் உலகளவில் புகைபிடிப்போர் எண்ணிக்கை குறையும் சூழலில் கூட, சர்வதேச சிகரெட் நுகர்வில் சீனாவின் பங்கு 47.2% என குறிப்பிடப்பட்டுள்ளது.
தரவுகளின்படி, 2003 முதல் 2023 வரை சீனாவில் சிகரெட் நுகர்வு 39% உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் உலகின் பிற நாடுகளில் சிகரெட் விற்பனை 26.4% குறைந்துள்ளது. தற்போது சீனாவில் ஆண்டுக்கு சுமார் 2.44 லட்சம் கோடி சிகரெட்டுகள் விற்பனையாகின்றன என கூறப்படுகிறது.
இந்த விற்பனையில் சுமார் 90% சீனா தேசிய புகையிலை நிறுவனம் என்ற அரசு நிறுவனம் மூலம் நடைபெறுகிறது. மேலும் உலகளவில் உற்பத்தியாகும் மொத்த சிகரெட்டுகளில் 40% முதல் 50% வரை இந்நிறுவனம் தயாரிப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2025ல் இந்த அரசு புகையிலை நிறுவனம் அரசுக்கு சுமார் 21 லட்சம் கோடி ரூபாய் லாபம் மற்றும் வரி வருவாயை வழங்கியதாகவும், இது சீன அரசின் மொத்த வருவாயில் 7% அளவுக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், அரசுக்கு பெரும் வருமானம் தரும் துறையாக இருப்பதால் வலுவான புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற விமர்சனங்களும் எழுகின்றன.





