மத்திய அரசு வழங்கும் பஞ்சாயத்து விருதுகளில் ஒன்றான நானாஜி தேஷ்முக் பஞ்சாயத் விகாஸ் புரஸ்கார் பிரிவில், தமிழகத்தின் கோவை மாவட்ட ஊராட்சி சிறந்த மாவட்ட ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வறுமை ஒழிப்பு, சுகாதாரம், குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன், தண்ணீரில் தன்னிறைவு, துாய்மை–பசுமை, உள்கட்டமைப்பு மேம்பாடு, சமூக நீதி மற்றும் சமூக பாதுகாப்பு போன்ற துறைகளில் சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளை இந்த விருதுகள் மூலம் மத்திய அரசு பாராட்டி வருகிறது. 2025ஆம் ஆண்டுக்கான விருதுகளில் மொத்தம் 42 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விருது வழங்கும் விழா டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜூன் 3 மற்றும் 4 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் கோவை மாவட்ட ஊராட்சி சிறப்பு அதிகாரி சங்கீத் பல்வந்த் வாகே பங்கேற்று விருதை பெற உள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்காக சென்னை, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, மதுரை, வேலூர், ராணிபேட்டை, திருச்சி, கடலூர், நீலகிரி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 29 ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். மேலும் தென்காசி, செங்கல்பட்டு, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 26 உள்ளாட்சி பிரதிநிதிகள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
ஒரே விருதை பெற மொத்தம் 55 பேர் ஊரக வளர்ச்சி துறை திட்ட நிதியில் விமானத்தில் டில்லி சென்று, ஹோட்டலில் தங்கி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக செலவுகளை குறைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள சூழலில், இந்த பயணத்தின் அளவு குறித்து கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.





