புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க ஐந்து பேரின் பெயர்களை சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அந்த பட்டியலில் கோவையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மோகனாவும் இடம்பெற்றுள்ளார்.
அவரது நியமனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், நீதிபதி ஆர். பானுமதிக்கு பிறகு தமிழகத்திலிருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகும் இரண்டாவது பெண் என்ற பெருமை மோகனாவுக்கு கிடைக்கும்.
சட்டப் பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்த மோகனா, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப்படிப்பு அறிமுகமான முதல் பேட்ச்சில் கோவை சட்டக் கல்லூரியில் பயின்றார். 1988-ல் பட்டம் பெற்ற அவர், குறைந்த வசதிகள் கொண்ட விடுதியில் தங்கி படித்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது.
கோவையில் வழக்கறிஞர் பஞ்சபாகேசன் அலுவலகத்தில் பயிற்சியைத் தொடங்கி, வழக்கு குறிப்பு தயாரித்தல், வாதங்களை திட்டமிடுதல், நீதிமன்ற விசாரணைகளை நேரடியாக கவனித்தல் போன்றவற்றை கற்றுக்கொண்டார். பட்டம் பெற்ற பின் நீண்ட நேரம் உழைத்து அனுபவம் சேர்த்த அவர், 1992-ல் டில்லிக்கு சென்று பணியைத் தொடர முடிவு செய்தார்.
டில்லியில் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ராவிடம் பயிற்சி பெற்றதுடன், பின்னர் பல முன்னணி வழக்கறிஞர்களுடன் இணைந்து பணியாற்றினார். 1996-ல் ‘அட்வகேட் ஆன் ரெக்கார்ட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், சுப்ரீம் கோர்ட், டில்லி உயர் நீதிமன்றம், தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளில் வாதாடத் தொடங்கினார். அரசியல்சாசன சட்டம், ஊழல், போதைப்பொருள், கிரிமினல், சேவை மற்றும் சிவில் விவகாரங்கள் உள்ளிட்ட அரசின் வழக்குகளிலும் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், கட்டணம் இன்றி வழக்காடுதல் உள்ளிட்ட சட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார். 2015-ல் சுப்ரீம் கோர்ட் அவரை மூத்த வழக்கறிஞராக அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.





