விழுப்புரம்: ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தரப்புக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை இழுப்பது “ஜனநாயக விரோதம்” என்றும், சட்ட விதிகளுக்கு எதிரான இச்செயலை ஏற்க முடியாது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் (இ.கம்யூ.) மாநிலச் செயலர் வீரபாண்டியன் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவதாகவும், எந்தக் குடைச்சலும் இல்லாமல் ஐந்து ஆண்டுகள் ஆதரவு தொடரும் என்றும் கூறினார். ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கைகளில் இடதுசாரிகள் ஈடுபட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
முதல்வர் விஜய் டெல்லி சென்று பிரதமர் மற்றும் நிதியமைச்சரை சந்தித்து முன்வைத்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திய வீரபாண்டியன், அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றார். தமிழகத்தில் வான்வழி பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா மேற்கொள்ளும் முயற்சியைத் தடுக்க வேண்டும்; மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார். கட்சி மாறி வந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இடைத்தேர்தலில் த.வெ.க. வாய்ப்பளித்தால், அந்த சூழலில் தங்களின் நிலைப்பாட்டை முடிவு செய்வோம் என்றும் அவர் கூறினார்.
விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் முதல்வரிடம் அவர் கோரிக்கை வைத்தார்.





