சென்னையில் இருந்து வெளியாகும் தகவலின்படி, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி பதவியை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு வழங்க தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கட்சிக்குள் பழனிசாமி தலைமையிலான அணி மற்றும் வேலுமணி தரப்பிலான அணி என இரு பிரிவுகள் உருவானதாக கூறப்படுகிறது. பழனிசாமி அணியில் 22 எம்.எல்.ஏ.க்களும், வேலுமணி அணியில் 25 எம்.எல்.ஏ.க்களும் இருந்ததாக தகவல்.

சட்டசபையில் த.வெ.க. அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, வேலுமணி அணி ஆதரவு தெரிவித்ததாகவும், அந்த அணியை விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற சண்முகம் வழிநடத்தினார் என்றும் கூறப்படுகிறது. வேலுமணி தரப்பிற்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என தகவல் வெளியானது.

ஆனால் தி.மு.க. கூட்டணியில் இருந்து த.வெ.க. கூட்டணிக்கு வந்த காங்கிரஸ், வி.சி.க. மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அ.தி.மு.க. வினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால் வேலுமணி அணியில் குழப்பம் ஏற்பட்டதாகவும், அந்த அணியில் இருந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்ததாகவும், அவர்களுக்கு வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்.

பின்னர் வேலுமணி அணி பழனிசாமியுடன் சமரசம் செய்ததாகவும், வேலுமணி அணியில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் சண்முகம் மற்றும் புதுக்கோட்டை விஜயபாஸ்கர் மட்டும் ஒதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சண்முகம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால் அவரை தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிப்பதாக கூறி த.வெ.க. பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.