சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய தி.மு.க. அமைத்த கள ஆய்வுக் குழு கூட்டங்களில், பெண் உறுப்பினரிடம் கட்சி நிர்வாகி ஒருவர் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது.

கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதன்படி, தோல்வி காரணங்களை ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சில தொகுதிகளில் நடந்த கூட்டங்களில், கட்சிக்குள் உள்ள இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கோஷ்டி மோதலாக மாறியதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகனுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், கள ஆய்வுக் கூட்டத்திற்கு அவரை அழைத்ததாகவும், அங்கு அவரது தந்தையின் செயல்பாடுகள் குறித்து புகார்கள் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த குற்றச்சாட்டுகளை அவர் ஏற்கவும் மறுக்கவும் முடியாமல் தவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வுக் குழுவினர் இளைஞர்களாக இருப்பதால், தங்கள் ஆதரவாளர்களை மட்டும் அழைத்து சென்று வேட்பாளர்களை குற்றவாளிகள் போல நிறுத்தி விசாரிப்பதாகவும், இதனால் வேட்பாளர் தரப்பினர் மோதலுக்கு இறங்கிய சம்பவங்கள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், அறிவாலயத்தில் புகார் அளிக்க வந்தால் புகார்களை முறையாக பெறவில்லை; மனுக்கள் குப்பைத் தொட்டியில் வீசப்படுவதாகவும் அந்த நிர்வாகி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், கள ஆய்வுக் குழு அறிக்கை சமர்ப்பிக்க அளிக்கப்பட்ட அவகாசம் ஜூன் 5க்கு பதிலாக ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.