அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), முன்பு கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு தற்போது மீண்டும் இணைந்தவர்கள், தங்கள் பழைய பதவிகளை பயன்படுத்தி விளம்பரப்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு கட்சிக்குள் ஏற்பட்ட குழப்ப சூழலில், இபிஎஸ்க்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அணியமைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அந்த அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பின்னர் அதை த.வெ.க. ஆதரவு அணியாக மாற்றியதாகவும், த.வெ.க.க்கு ஆதரவு அளித்தவர்களை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி இபிஎஸ் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, வேலுமணி அணியில் இருந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வுக்கு சென்றதாகவும், மேலும் ஐந்து எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி அணிக்கு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் வலுவிழந்த வேலுமணி தரப்பு, இபிஎஸுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, “மறப்போம், மன்னிப்போம்” என்ற முடிவின் கீழ் இரு தரப்பும் மீண்டும் ஒன்றிணைந்ததாக தகவல் வெளியாகியது.

இந்த பின்னணியில், முன்பு பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தங்கள் பழைய கட்சி பதவிகளை காட்டி விளம்பரம் செய்யக் கூடாது என இபிஎஸ் தற்போது தெளிவான அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.