புதுடில்லி: இந்திய சுற்றுலா துறையை அடுத்த சில தசாப்தங்களில் பெரிய அளவில் வளர்த்தெடுக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார். 2047க்குள் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகை 10 கோடியை எட்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுற்றுலாவை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 2023–24 நிதியாண்டு தரவுகளின்படி நாடு முழுவதும் சுற்றுலா துறை மூலம் 8.4 கோடி பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார். பொருளாதாரம் வேகமாக வளர்வதற்கேற்ப சுற்றுலா தேவையும் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
2030க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுற்றுலா துறையின் பங்களிப்பு 7 சதவீதத்தை தாண்டும் என அவர் கூறினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் விவசாயத்துறைக்கு அடுத்தபடியாக சுற்றுலா துறை முக்கிய இடம் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவைப் பற்றிய உலக நாடுகளின் பார்வை மாறி வருவதாக கூறிய அமைச்சர், மாசுபாடு மற்றும் பாதுகாப்பு குறித்து வெளிநாடுகளில் தவறான கண்ணோட்டம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். மாசுபாடு ஓரிரு மாதங்களுக்கு மட்டுமே நீடிப்பதாகவும், அது பெரும்பாலும் டில்லியிலேயே இருப்பதாகவும் கூறி, நாட்டின் பிற பகுதிகள் துாய்மையாக உள்ளன என்றார். சுவிட்சர்லாந்தை எடுத்துக்காட்டாகக் கூறி, சுற்றுலா பயணியரை வரவேற்கும் பண்பாட்டை இந்தியர்களும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





