புதுடில்லி: மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதிநீர் பங்கீட்டு பிரச்னைகளை சுமுகமாக பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களுக்கு அறிவுறுத்தினார். இதற்கு மத்திய பிரதேசம்–உத்தர பிரதேசம் இணைந்து செயல்படுத்தும் ‘கென்–பெத்வா’ திட்டம் முன்னுதாரணமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மத்திய–மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு திட்டங்களை ஆய்வு செய்யும் 51வது ‘பிரகதி’ ஆலோசனை கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இதில் ரயில்வே, மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் துறைகளின் கீழ், ஒன்பது மாநிலங்களில் செயல்படுத்தப்படவுள்ள ஏழு முக்கிய திட்டங்கள் குறித்து, சுமார் ரூ.30,000 கோடி மதிப்பில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில், நதிநீர் பங்கீட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண மாநிலங்களின் ஒத்துழைப்பு, உரிய காலத்தில் ஒப்புதல், தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் செயல்பாட்டு திறன் ஆகியவை முக்கியம் என பிரதமர் தெரிவித்தார். ‘கென்–பெத்வா’ நதிநீர் இணைப்பு திட்டம் இதை நடைமுறையில் காட்டும் உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல், பிற மாநிலங்களும் நதிநீர் இணைப்பு, நீர் சேமிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல் மற்றும் திறன் வாய்ந்த நீர்பாசன முறைகளை ஒருங்கிணைந்து செயல்படுத்தி, நீண்டகால நீர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், மக்கள் நல திட்டங்களில் காலதாமதம் ஏற்பட்டால் செலவு உயர்வதுடன், மக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய சேவைகளும் தாமதமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். எனவே மத்திய அமைச்சகங்களும் மாநில அரசுகளும் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு விரைவாக ஒப்புதல் வழங்கி, முக்கிய திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.