புதுடில்லி: 2024-25 நிதியாண்டில் 36 அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சிகளின் மொத்த வருவாய், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.1,270.23 கோடி குறைந்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர்.) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளின் அடிப்படையில், 2024-25ல் இந்த 36 கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.1,192.94 கோடி. 2023-24ல் ரூ.2,463.17 கோடியாக இருந்தது. இதன் மூலம் 51.57% சரிவு ஏற்பட்டதாக ஏ.டி.ஆர். கூறியுள்ளது.

வருவாய் குறைந்திருந்தாலும், 36 கட்சிகள் அறிவித்த மொத்த செலவினம் ரூ.1,433.07 கோடி. இது மொத்த வருவாயை விட ரூ.240.12 கோடி (சுமார் 20%) அதிகம். மேலும் 21 கட்சிகள் தங்கள் வருவாயை விட அதிகமாக செலவிட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருவாய் அடிப்படையில் தெலுங்கு தேசம் கட்சி ரூ.228.31 கோடியுடன் (மொத்தத்தில் 19.14%) முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக திரிணமுல் காங்கிரஸ் ரூ.219.35 கோடியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ரூ.140.39 கோடியும் பெற்றுள்ளன. செலவினத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ரூ.340.20 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது; அதைத் தொடர்ந்து பிஜு ஜனதா தளம் ரூ.288.44 கோடியும், திரிணமுல் காங்கிரஸ் ரூ.227.59 கோடியும் செலவிட்டுள்ளன.

மேலும் 15 கட்சிகள் செலவிடப்படாத வருவாயை கையிருப்பாக வைத்துள்ளதாக ஏ.டி.ஆர். தெரிவித்துள்ளது. இதில் தெலுங்கு தேசம் கட்சி ரூ.166.98 கோடியுடன் அதிகபட்ச கையிருப்பை வைத்துள்ளது. கட்சிகளின் நிதி திரட்டலில் தன்னார்வ நன்கொடைகளே முக்கிய ஆதாரமாக இருந்து, ரூ.702.36 கோடி (58.88%) வருவாய் நன்கொடைகள் வழியாக வந்ததாகவும் அறிக்கை கூறுகிறது.