மேற்காசிய போரால் கப்பல் போக்குவரத்து மற்றும் விநியோக தொடர்களில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்றதன்மை காரணமாக எரிபொருள், உரங்கள் விலை உயர்ந்து வருகிறது. இதே நேரத்தில் கடுமையான வெப்ப அலைகள் மற்றும் குறைவான பருவமழை போன்ற சூழல் அழுத்தங்களும் இந்தியாவை எதிர்கொள்கின்றன.
இந்த நெருக்கடிகளில் சில உலக அரசியல் காரணங்களால் உருவானாலும், இந்தியாவின் பல பாதிப்புகள் நம்முடைய கட்டமைப்பு பலவீனங்களிலிருந்தே வருகிறது என கட்டுரை சுட்டுகிறது. வீட்டு சமையல் எரிவாயு, தொழில், போக்குவரத்து, உர உற்பத்தி ஆகியவற்றுக்கு இந்தியா பெருமளவில் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற புதைபடிம எரிபொருட்களை நம்பி உள்ளது. கொள்கைகள் பெரும்பாலும் ‘விநியோகத்தை அதிகரிக்கும்’ அணுகுமுறையில் கவனம் செலுத்தி, ‘தேவையை கட்டுப்படுத்தும்’ நடவடிக்கைகளை புறக்கணிக்கின்றன என்பதும் இதில் வலியுறுத்தப்படுகிறது.
வேளாண் துறையில், கால்நடை சாணம், மனித கழிவுகள், கழிவுநீரில் உள்ள ஊட்டச்சத்துகளை மறுசுழற்சி செய்யாமல் விட்டதால் உர இறக்குமதி சார்பு அதிகரித்ததாகவும், சுத்திகரிக்கப்படாத கழிவுகள் நீர்நிலைகளை மாசுபடுத்தி பாசிமயமாக்கலுக்கு வழிவகுப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், வளிமண்டல நைட்ரஜனை நிலத்தில் நிலைநிறுத்தும் திறன் கொண்ட பருப்பு வகைகளை பயிர் சுழற்சியில் சேர்ப்பது குறைந்த தண்ணீரில் பயன் தருவதோடு யூரியா தேவையையும் குறைக்கும் என விளக்கப்படுகிறது. 2025 அக்டோபரில் தொடங்கப்பட்ட ‘தல்ஹன் ஆத்மநிர்பர்தா மிஷன்’ திட்டத்தில் சில பருப்புகளை குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு முழுமையாக கொள்முதல் செய்வதாக அறிவிக்கப்பட்டாலும், 2026 ஏப்ரல் விவசாய அமைச்சக தரவுகளின்படி பருப்பு பயிரிடும் பரப்பளவு 1.26% மட்டுமே உயர்ந்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் எல்.பி.ஜி., எல்.என்.ஜி. சார்பை குறைக்க, மாட்டு சாணம், சிறுநீர், மனித கழிவுகள் உள்ளிட்ட உயிரி கழிவுகளை பயன்படுத்தி உயிரிவாயு மற்றும் பயோசார் தயாரிப்பை வேகப்படுத்த வேண்டும் என்றும் கட்டுரை கூறுகிறது. ஆண்டுக்கு சுமார் 9,000 கோடி கன மீட்டர் அளவிற்கு சுருக்கப்பட்ட உயிரிவாயு தயாரிக்கும் திறன் இந்தியாவிடம் இருப்பதாக மதிப்பிடப்பட்டு, அது நாட்டின் இயற்கை எரிவாயு தேவையை முழுமையாக பூர்த்தி செய்யக்கூடியதாகவும் குறிப்பிடப்படுகிறது. தேசிய உயிரிசக்தி இயக்கம், கோபார்-தான், எஸ்.ஏ.டி.ஏ.டி. போன்ற திட்டங்கள் ஊக்கத்தொகை வழங்கினாலும், கடந்த ஆண்டு நிலவரப்படி 170 ஆலைகள் செயல்பாட்டிலும் 300 ஆலைகள் கட்டுமானத்திலும் இருப்பதைத் தொடர்ந்து, விரிவாக்கத்தை இன்னும் வேகப்படுத்த வேண்டிய அவசியம் வலியுறுத்தப்படுகிறது.
உர பயன்பாட்டில், முதலில் கம்போஸ்ட், மாட்டு சாணம், பயோசார் போன்ற இயற்கை உரங்களை அடிப்படையாகக் கொண்டு, அதன் பின்னரே ரசாயன உரங்களை கூடுதல் ஊட்டச்சத்தாக பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையும் முன்வைக்கப்படுகிறது. இந்திய அளவிலான ஆய்வுகள், பரிந்துரைக்கப்பட்ட ரசாயன உரத்தின் பாதி அளவை இயற்கை உரங்களால் மாற்றியும் மகசூலில் இழப்பு இல்லை என்பதை காட்டியதாக கட்டுரை குறிப்பிடுகிறது.




