தமிழகத்தில் தொழிற்சாலைகளின் புகை, சாலைகளில் மண் புழுதி, வாகனப்புகை, கட்டுமான பணிகள் உள்ளிட்ட காரணங்களால் காற்று மாசு அதிகரித்து வருவதாக, மாசு கட்டுப்பாட்டு வாரிய கண்காணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
காற்று மாசு அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்போருக்கு நுரையீரல் மற்றும் சுவாசப் பிரச்னைகள் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. இதனை வெளிப்படுத்தும் வகையில் காற்று மாசுபாடு தரக்குறியீடு (AQI) கணக்கிட்டு அவ்வப்போது வெளியிடப்படுகிறது.
வகைப்பாட்டின்படி, 0–50 என்ற அளவு பிரச்னையில்லை; 50–100 திருப்திகரம்; 101–200 மிதமானது; 201–300 மோசமானது; 301–400 மிக மோசமானது என தரக்குறியீடு பிரிக்கப்படுகிறது.
தொழிற்சாலைகள் அதிகம் உள்ள சென்னை மணலி பகுதியில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் 200–300 வரை தரக்குறியீடு பதிவாகி, சில நேரங்களில் 300-ஐத் தாண்டியும் பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்ட கும்மிடிப்பூண்டி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீளவிட்டான் பகுதிகளில் 100–200 வரை பதிவாகி, மாநிலத்தின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் 50–100 வரை பதிவாகியுள்ளது.





