அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 90வது நாளை எட்டியுள்ள நிலையில், தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனால் நிரந்தர ஒப்பந்தம் தொடர்பான தெளிவு இல்லாததால் போர் முடிவடையும் வாய்ப்பில் சந்தேகம் நீடிக்கிறது.

ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு, அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்களை மையமாக வைத்து அமைதி பேச்சு நடத்த முயற்சிகள் நடைபெறுகின்றன. இரு தரப்பும் கடுமையான நிபந்தனைகள் விதிப்பதாக கூறப்படுவதால் பேச்சுவார்த்தை முன்னேற்றம் இழுபறியாக உள்ளது.

போர் நிறுத்தம் அமலில் இருந்தபோதும், அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது நாளாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலடியாக, மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை ஈரான் தாக்கியதுடன், பதில் நடவடிக்கை மேலும் தீவிரமாகும் என எச்சரித்துள்ளது.

இந்த பின்னணியில், 60 நாள் தற்காலிக போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் புதிய அணுசக்தி பேச்சுவார்த்தைக்கான கட்டமைப்பும் பேச்சுவார்த்தை குழுக்களால் இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதிபர் டொனால்ட் டிரம்ப் இதற்கு இன்னும் ஒப்புதல் தராமல் நிராகரித்ததாக தகவல் தெரிவிப்பதால், போர் முடிவுக்கு வரும் வாய்ப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுந்துள்ளது.