சென்னை: மேகதாது அணை விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், தமிழக முதல்வர் விஜய் தனது இரண்டு நாள் டில்லி பயணத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திக்காமல் சென்னை திரும்பியுள்ளார்.
முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக டில்லி சென்ற விஜய், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்த கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழக வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை வலியுறுத்தினார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அவரை, டில்லியில் பணியாற்றும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இதன் பின்னர் காங்கிரஸ் தேசிய தலைவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரையும் சந்திக்காமல் காலை 10 மணியளவில் தனி விமானத்தில் சென்னை புறப்பட்டார். காங்கிரஸ் வட்டாரத்தில், மேகதாது விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையையும் சந்தித்தால் அதே கோரிக்கையை அங்கும் வைக்க வேண்டிய அழுத்தம் உருவாகலாம்; இது தேவையற்ற அரசியல் நெருக்கடியையும், மாநிலத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தல்களிலும் தாக்கத்தையும் ஏற்படுத்தலாம் என்பதால் சந்திப்பை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
ஆனால், காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, முந்தைய நாள் மாலை 6 மணிக்கு பிறகு ராகுலுக்கு நேரமில்லை என்பதால் சந்திப்பு நடைபெறவில்லை என்றும், அடுத்த முறை முதல்வர் டில்லி செல்லும்போது ராகுலை சந்திப்பார் என்றும் தெரிவித்தார்.
டில்லியில் ஜூன் 11 அன்று பிரதமர் மோடி தலைமையில் ‘நிடி ஆயோக்’ கூட்டம் நடைபெற உள்ளது; இதில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விஜய் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதனால் அவர் மீண்டும் டில்லி செல்லக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை கண்டித்து த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் அறிக்கை வெளியிட்டு, மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என கர்நாடக காங்கிரஸ் அரசை தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.





