அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்காணிக்க புதிய இணையதளத்தை டிரம்ப் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதிலிருந்து குடியேற்ற சட்ட அமலாக்கத்தை கடுமையாக்கி வரும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Aliens.gov என்ற டொமைனில் இயங்கும் இந்த தளம், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) மேற்கொள்ளும் அமலாக்க நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கிறது.
மேலும் குடியேற்ற நடைமுறைகளை நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் உதவும் கருவியாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் புலம்பெயர்ந்தோர் கைதுகள் தொடர்பான தகவல்கள், தரவுகள் மற்றும் வரைபடம் இடம்பெற்றுள்ளன.
டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான குடியேற்ற எதிர்ப்பு மற்றும் நாடுகடத்தல் கொள்கைகளை விளம்பரப்படுத்தும் முயற்சியாக இதை ஆதரவாளர்கள் பார்க்கின்றனர். ஆனால் மனிதர்களை ‘ஏலியன்கள்’ எனச் சித்தரிப்பது பயத்தை உருவாக்கும் வகையில் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.





