சென்னையில் கட்டுமான திட்ட அனுமதி கோரி தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 27 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வோம் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ள நிலையில், துறைகள் தங்களின் பணிகளை முடிக்க காலக்கெடுகளுடன் நடைமுறை உத்தரவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி கமிஷனர் ஜி.எஸ். சமீரன் வெளியிட்ட உத்தரவின்படி, விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட 7 நாட்களுக்குள் உதவி செயற் பொறியாளர் கள ஆய்வை முடிக்க வேண்டும். ஆய்வு முடிந்த 2 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்; அதனைத் தொடர்ந்து ஆவண ஆய்வு பணிகள் அடுத்த 5 நாட்களில் நிறைவேற்றப்பட வேண்டும்.
சந்தேகங்கள் இருந்தால் கூடுதல் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே பெற அடுத்த 2 நாட்கள் பயன்படுத்தலாம். விண்ணப்பதாரர் விளக்கம் அல்லது கூடுதல் ஆவணங்களை வழங்க 7 நாட்கள் அவகாசம் அளிக்கலாம்; அதன் பின்னர் ஆன்லைன் கட்டணம் வசூலிக்க அடுத்த 3 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, அடுத்த ஒரு நாளில் டிஜிட்டல் முறையில் கட்டட அனுமதி வரைபடத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்; இதன் மூலம் மொத்தமாக 27 நாட்களில் அனுமதி வழங்கப்பட வேண்டும். அனைத்து ஆவணங்களும் சரியாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 18 நாட்களில் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும், சி.எம்.டி.ஏ. ஒப்புதல் பெற்ற திட்டங்களுக்கு கட்டுமான பணி உரிமத்தை 7 நாட்களில் வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





