கோவை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை விசிக அமைச்சர் வன்னி அரசுவை வரவேற்க அரசு அதிகாரிகள் மற்றும் கட்சியினர் பெருந்தொகையாக உள்ளே நுழைந்ததாக விமானப் பயணிகள் குற்றம்சாட்டினர்.
பயணிகள் கூறுகையில், முதல்வர் அல்லது மத்திய அமைச்சர் போன்ற விஐபிகள் வரும்போதும் பொதுவாக கலெக்டர் உள்ளிட்ட ஓரிரு அதிகாரிகளுக்கே விமான நிலையத்துக்குள் அனுமதி வழங்கப்படும். ஆனால் இம்முறை சுமார் 12 அதிகாரிகள் ஒரே நேரத்தில் உள்ளே சென்றதாகவும், கட்சியினர் எஸ்கலேட்டர் பகுதி வரை வந்ததாகவும் தெரிவித்தனர்.
வாகனங்கள் காத்திருக்கும் இடத்திலும் இதேபோன்ற அத்துமீறல் நடந்ததாக கூறப்படுகிறது. அமைச்சரை வரவேற்க பத்துக்கும் மேற்பட்ட கார்கள் வரிசையாக காத்திருந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு அதிகாரிகளையும் கட்சியினரையும் கூட்டமாக விமான நிலையத்துக்குள் அனுமதிப்பது பாதுகாப்பு விதிமுறை மீறல் என்றும், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பொறுப்பு யாருக்கு என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதை விமான நிலைய அதிகாரிகள் எப்படி அனுமதித்தனர் என்பதையும் நேரில் பார்த்தவர்கள் கேள்வியாக முன்வைத்தனர்.





