சென்னை: சட்டசபை தேர்தல் தோல்வி காரணங்களை அறிய, தி.மு.க. தலைமை 36 பேர் கொண்ட கள ஆய்வு குழுவை அமைத்துள்ளது. இந்த குழு தொகுதிவாரியாக சென்று, மாவட்ட நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் ஒன்றியம்–நகரம்–பகுதி–பேரூர் அளவிலான பொறுப்பாளர்களிடம் தனித்தனியாக கருத்து கேட்டு வருகிறது.
கட்சிவட்டார தகவலின்படி, பலர் மறைந்த தலைவர் கருணாநிதியின் செயல்பாடுகளை நினைவுகூர்ந்து, தற்போதைய நிலையை ஒப்பிட்டுப் பேசினர். கருணாநிதி அறிவாலயத்திற்கு அடிக்கடி வந்து, மாவட்டம் முதல் கிளை வரை உள்ள நிர்வாகிகளிடம் நேரடியாக கட்சி நிலவரம் கேட்டறிந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் ஸ்டாலின் முதல்வரான பின் அறிவாலய வருகை முறையாக இல்லை என்றும், வந்தாலும் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் போன்ற முக்கிய நிர்வாகிகள் மட்டுமே உடன் இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், சந்திப்பு வாய்ப்பு சிலருக்கே கட்டுப்படுத்தப்பட்டதால், கீழ்மட்ட தகவல்கள் தலைமைக்கு செல்வதில்லை என்ற அதிருப்தியும் வெளிப்பட்டதாக கூறப்படுகிறது.
உள்ளூரில் சில லட்சம் ரூபாய் அளவில் நடைபெறும் சிறு ஒப்பந்த பணிகள் மற்றும் சில பணிகளுக்கான பரிந்துரைகள் முன்பு உள்ளூர் கட்சி நிர்வாகிகள் வழியாக நடந்ததாகவும், கடந்த ஆட்சிக்காலத்தில் அவை தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் சிலர் தெரிவித்தனர். அந்த வாய்ப்புகள் முதல்வரின் மருமகன் சபரீசன் பரிந்துரைத்தவர்களுக்கு சென்றதாகவும் சிலர் கூறியதாக தகவல்.
மேலும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ் வழங்கச் சென்ற கட்சியினரை நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாகவும், விழாக்களுக்கு வராததாகவும் சிலர் புலம்பியதாக கூறப்படுகிறது. இந்த விரக்தி குடும்பங்களுக்குள் வாக்குப்பதிவிலும் தாக்கம் ஏற்படுத்தியதாகவும், இறுதியில் தோல்விக்கு ஸ்டாலினும் சபரீசனும் பொறுப்பு ஏற்க வேண்டும்; தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என பலர் கூறியதாகவும் கட்சிவட்டாரம் தெரிவித்தது.




