விவசாய கடன் தள்ளுபடி நடவடிக்கை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வழங்கிய வழிகாட்டுதலின்படியே மேற்கொள்ளப்பட்டதாக நிதியமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார். வேளாங்கண்ணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் ஆர்பிஐ கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை எனவும் கூறினார்.

திமுக ஆட்சிக்கால நிதி மேலாண்மை குறித்து வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அது இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அந்த அறிக்கையில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்றார்.

அனைத்துத் துறைகளிலும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், தணிக்கை அறிக்கைகளை கேட்டுள்ளதாகவும் மரியவில்சன் கூறினார். குறிப்பாக மதுரை மாநகராட்சியில் ஊழல் தொடர்பான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

விவசாய கடன் தள்ளுபடி குறித்து அவர் கூறுகையில், 2021-ல் அதிமுக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து வந்த திமுக அரசு பல தவணைகளாக அறிவித்து நடைமுறைப்படுத்தியதாக குறிப்பிட்டார். 2024-ல் ஆர்பிஐ புதிய விதிமுறையை அறிவித்து, 45 நாட்களுக்குள் தள்ளுபடியை நிறைவேற்ற காலக்கெடு வழங்கியதாகவும், அதனடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான விவரங்கள் தெரியவரும் என்றார். ஜனநாயக நாட்டில் யாரும் எந்தக் கட்சியிலும் சேரலாம்; அந்த அடிப்படையில் அதிமுகவினர் மற்றொரு கட்சியில் இணைவதை வரவேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.