கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழான தடுப்பு காவல் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சென்னை கொளத்தூரில், தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே. சுதீஷின் மனைவி பூர்ணஜோதி பெயரில் உள்ள நிலத்தில் 234 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டதாகவும், அதில் 78 குடியிருப்புகள் வழங்கப்பட்ட நிலையில் முறைகேடுகள் நடந்ததாகவும் கூறி சர்மா கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த தடுப்பு காவலை எதிர்த்து, சர்மாவின் மகள் வர்ஷா சர்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்தது.

புழல் மத்திய சிறையில் உள்ள சர்மாவுக்கு வேறு வழக்கில் தொடர்பு இல்லை என்றால் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜரானதும் குறிப்பிடத்தக்கது.