கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சமூகத்தையோ பொது ஒழுங்கையோ பாதிக்கும் அளவுக்கு காரணங்கள் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.
ஒப்பந்த மீறல் போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவை வழக்கமான நீதிமன்ற நடைமுறைகளில் விசாரிக்கப்பட வேண்டியவை எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், இந்த வழக்கால் பொது ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக கூறுவது “கேலிக்கூத்தானது” என்றும், குண்டர் சட்டத்தை பயன்படுத்த எந்த அவசியமும் இல்லை என்றும் கூறியது.
மேலும், இது பொது அமைதி வரம்புக்குள் வராத வழக்கு என்பது தெரிந்திருந்தும், 28 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான அருண் இந்த தடுப்புக் காவல் உத்தரவை பிறப்பித்துள்ளார் என்றால், அது வேண்டுமென்றே செய்யப்பட்டதாகவே பொருள் கொள்ள வேண்டியுள்ளது என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
அருண் வழக்கமாக குண்டர் சட்டத்தில் தடுப்புக் காவல் உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் ஆஜரானபோதும் தன் உத்தரவு தவறானது என்பதை உணர்ந்ததாக தெரியவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. தொடர்பில்லாத காரணத்துக்காக சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு கண்டனத்துக்குரியது எனவும் கூறப்பட்டது.





