சென்னை: வெயிலின் தீவிரத்தால் உடல் அதிகமாக சூடாகும் போது, சுயமாக பாராசிட்டமால் அல்லது ஆஸ்பிரின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டாம்; இதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படலாம் என பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். இதை மீறி வெப்பநிலை உயரும்போது தலைவலி, உடல்சோர்வு, தலைச்சுற்றல், சதைபிடிப்பு, மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் தோன்றலாம்; இது வெயில் தொடர்பான உடல்நல பாதிப்பை காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார நிபுணர் குழந்தைசாமி கூறுகையில், இத்தகைய சூழலில் மருந்துகளை சுயமாக எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றார். பாதிக்கப்பட்டவரின் உடலை நீரில் நனைத்த துணியால் துடைத்து, விசிறி விடுவதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்கலாம்; மேலும் குளிர்ந்த நீர், இளநீர் அல்லது மோர் பருகக் கொடுத்து, குளிர்ந்த இடத்தில் அமர வைப்பது நல்லது என்றார்.
பாதிக்கப்பட்டவர் மயக்க நிலையில் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஆஸ்பிரின், பாராசிட்டமால் போன்றவை கிருமி தொற்றால் வரும் காய்ச்சலுக்காக பயன்படும் மருந்துகள்; வெயில் வெப்பத்தின் போது எடுத்தால் கல்லீரல், சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்த குறைபாடு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்றும், மருத்துவர் பரிந்துரையின்றி அல்லது அதிக அளவில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.





