சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு உணவு துறை அமைச்சர் வெங்கட் ரமணன் மற்றும் நிதி துறை அமைச்சர் மரிய வில்சன் நேற்று திடீரென ஆய்வுக்கு சென்றனர்.

ஆய்வின்போது கடை ஒட்டடையுடன் அழுக்கடைந்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும், முதியோருக்கான சேலைகள் குவிந்து கிடந்ததை பார்த்த அமைச்சர், அவற்றை வினியோகிக்காமல் ஏன் நிறுத்தி வைத்துள்ளீர்கள் என்று ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினார்.

அதே நேரத்தில் கடை வளாகத்தில் பூனைகள் அங்குமிங்கும் ஓடியதாக தெரிவிக்கப்பட்டது. இதைக் கண்ட அமைச்சர், “இந்த பூனை என்னை பார்க்க வந்ததா” எனக் கேட்டு, எலி–பூனை போன்றவை சுற்றித்திரிந்தால் உணவுப்பொருட்களை சுகாதாரமாக எப்படி வைத்திருக்க முடியும் என சுட்டிக்காட்டினார்.

கடையை சுத்தமாக பராமரித்து, மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார். அமைச்சரின் தொடர்ச்சியான கேள்விகளால் ரேஷன் கடை ஊழியர்கள் பதில் சொல்ல திணறியதாகவும் கூறப்படுகிறது.