முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ‘செவ்வந்தி இல்லம்’ அரசு பங்களாவை காலி செய்து வெளியேறியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் வசித்து வந்த வீடு இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்றபோது அவருக்கு இந்த அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. 2016 தேர்தலுக்குப் பிறகும் அதே வீட்டிலேயே அவர் தங்கியிருந்தார்; 2017ல் முதல்வராக ஆன பின்னரும் அங்கேயே தொடர்ந்து வசித்தார்.

2021 தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை இழந்தபோதும், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அவர் அந்த வீட்டிலேயே இருந்தார். ஆனால், சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்ததால், அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமையகம் அமைந்துள்ள பகுதியில், தெய்வசிகாமணி தெருவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அவர் குடியேறினார். குடியேற்றத்தை முன்னிட்டு நடந்த பால் காய்ச்சும் நிகழ்ச்சியில் பழனிசாமி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

அந்த வீடு பழனிசாமிக்கு நெருக்கமான ஆந்திர தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமானது என்றும், வாடகை இன்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.