தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் (பவர்பின்) மூலம் முதலீடு செய்யப்பட்ட கோவில்கள் மற்றும் மத நிறுவனங்களின் நிதி பாதுகாப்பாக இருக்கும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ‘இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட்’ தலைவர் டி.ஆர். ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், கோவில்கள் மற்றும் மத நிறுவனங்களின் உபரி நிதியை அரசு நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கும் வகையில், அறநிலையத் துறை சட்டத்தின் முதலீட்டு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதாகவும், இதற்காக கடந்த பிப்ரவரியில் அரசாணை வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவில் சொத்துகள் மற்றும் மத நிறுவன நிதியை பாதுகாக்கும் நோக்கில் சட்டம் இயற்றப்பட்ட நிலையில், அந்த நோக்கத்துக்கு முரணாக அரசாணை இருப்பதாக மனுதாரர் வாதிட்டார். மேலும், கோவில் நிதியை வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய தடை விதிக்கவும், அரசாணையை ரத்து செய்யவும் கோரினார்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வி. பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்த உத்தரவாத மனுவில், பவர்பினில் செய்யப்பட்ட முதலீடுகளுக்கு இதுவரை உரிய வட்டி முறையாக வழங்கப்பட்டு வருவதால், முதலீட்டு பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிமன்றம், மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தது.





