‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது பாகிஸ்தான் கடற்படை துறைமுகங்களிலேயே முடங்கும் வகையில் இந்தியக் கடற்படை செயல்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடற்படை வீரவணக்க பூங்காவை திறந்து வைத்த பின்னர் அவர் உரையாற்றினார். கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நினைவுபடுத்திய அவர், அதனால் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக முப்படைகளும் இணைந்து நடவடிக்கை எடுத்ததாகவும் கூறினார்.

இந்த நடவடிக்கையில் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத உள்கட்டமைப்புகள் துல்லிய தாக்குதல்களின் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதில் ராணுவமும் விமானப்படையும் தங்களது பணிகளைச் சிறப்பாகச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் கடற்படையின் பங்களிப்பும் முக்கியமானது என கூறிய ராஜ்நாத் சிங், அரபிக்கடலில் இந்தியக் கடற்படை முழு பலத்துடனும் உயர்ந்த தயார்நிலையுடனும் நிலைநிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவித்தார். இதன் மூலம் பாகிஸ்தான் கடற்படை தங்களது துறைமுகங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், திறந்து வைக்கப்பட்ட இந்த பூங்கா எதிர்காலத்தில் சுற்றுலா மையமாக உருவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.