வாதம் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட வழக்குகளில், மூன்று மாதங்களுக்குள் கட்டாயம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று நாடு முழுதும் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் தன் உச்ச அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டதாகவும், தனிமனித சுதந்திரம் தொடர்பான வழக்குகள் இன்னும் வேகமாக முடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது.

இந்த உத்தரவு, ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டேகாவில் நிலத்தகராறு தொடர்பாக 2009 ஜனவரியில் பவ்வா கெர்கெட்டா கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கின் பின்னணியில் வந்தது. அந்த வழக்கில் நான்கு பேருக்கு 2012 ஜூனில் விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்த நிலையில், அதனை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

மேல்முறையீடு விசாரணை முடிந்தபின்பும் இறுதி தீர்ப்பை அறிவிப்பதிலும், தீர்ப்பை இணையத்தில் பதிவேற்றுவதிலும் தாமதம் ஏற்பட்டதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதியை வழங்குவதில் இத்தகைய தாமதங்களை இனி அனுமதிக்க முடியாது என்று கடுமையாக எச்சரித்தது. மேலும், உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கால அனுபவத்தை பகிர்ந்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், மூன்று மாதங்களுக்கு மேல் தீர்ப்பை ஒத்திவைக்காமல் இருந்ததாக குறிப்பிட்டார்.

தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, விபின் எம். பஞ்சோலி ஆகியோர் அமர்வு, உயர் நீதிமன்றங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 10 வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில், ஜாமின் மனுக்களுக்கு அதே நாளோ அல்லது அதிகபட்சம் அடுத்த நாளோ தீர்ப்பு, ஜாமின் உத்தரவை உடனடியாக சிறை அதிகாரிகளுக்கு தெரிவித்தல், ஜாமின் கிடைத்தவர்களை அதே நாளோ அடுத்த நாளோ விடுவித்தல், நீதிமன்றத்தில் தீர்ப்பின் முக்கிய பகுதியை மட்டும் வாசித்தாலும் முழு காரணங்களுடன் கூடிய தீர்ப்பை 7 நாட்களுக்குள் இணையத்தில் பதிவேற்றுதல், 3 மாத காலக்கெடு மீறினால் தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையெனில் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுதல் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த உத்தரவுகள் எந்த நீதிபதிக்கும் அல்லது நீதிமன்றத்திற்கும் எதிரானவை அல்ல; நீதியை பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கவே இந்நடவடிக்கைகள் என்று அமர்வு தெளிவுபடுத்தியது. இவ்வழிகாட்டுதல்கள் வழக்குத் தேக்கத்தை குறைத்து, நீதிமன்ற செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.