சென்னை: சூரிய ஒளி நேரடியாகப் படும் இடங்களில் வைக்கப்படும் 20 லிட்டர் கேன் குடிநீரை அருந்துவது உடலில் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடை வெயிலால் கேன் குடிநீரின் தேவை அதிகரித்து, பல இடங்களில் ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை நடைபெறுகிறது. ஆனால் பல விற்பனையாளர்கள் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல், கேன்களை கடைகளின் வெளியே வெயிலில் வைத்தும், கடும் வெப்ப நேரங்களில் திறந்த வாகனங்களில் எடுத்துச் சென்றும் வருவதாக புகார்கள் உள்ளன.
இவ்வாறு வெயிலில் வைக்கும்போது கேனுக்குள் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு, பிளாஸ்டிக் நுண்துகள்கள் மற்றும் ரசாயனங்கள் தண்ணீரில் கலக்க வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக கேன்களில் உள்ள பாலிகார்பனேட் உள்ளிட்ட பொருட்கள் தண்ணீரில் கலந்தால், அகச்சுரப்பி அமைப்பை பாதித்து ஹார்மோன் மாற்றம் ஏற்படுத்தவும், புற்றுநோய் அபாயத்தை உயர்த்தவும் முடியும் என அவர்கள் கூறினர்.
மேலும் குடிநீரின் தர அளவுகோள்களாக, 1 லிட்டர் நீரில் கால்சியம் 10 முதல் 75 மி.கி. வரைவும், மெக்னீசியம் 5 முதல் 30 மி.கி. வரைவும் இருக்க வேண்டும் என துறை குறிப்பிட்டது. வெயிலால் நீரில் உள்ள டி.டி.எஸ். அளவு குறைந்தால் எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்றும் எச்சரித்தது.
முன்னெச்சரிக்கையாக கேன்களை குளிர்ந்த அல்லது நிழலான இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும்; கேனின் நிறம் மாறினால் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்; ஒரு கேனை சுமார் 30 முதல் 50 முறை வரை மட்டுமே மீண்டும் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. விதிகளை மீறும் விற்பனையாளர்கள் குறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை செயலி அல்லது https://www.foodsafety.tn.gov.in இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம்; ரூ.5,000 வரை அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.





