தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் எந்த முன்அறிவிப்பும் இன்றி திடீர் ஆய்வு மேற்கொண்டார். சாதாரண பக்தர் போல கருப்பு டி-ஷர்ட், பேன்ட் அணிந்து முகத்தில் மாஸ்க் போட்டபடி கோவிலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்முக விலாசம் மண்டபம் அருகே கூட்டநெரிசலை கவனித்துக் கொண்டிருந்த போது, ஒரு அர்ச்சகர் அவரை அணுகி “விரைவு தரிசனம்” ஏற்பாடு செய்து தருவதாக கூறி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஒருவருக்கு ரூ.1,000 எனவும், பணம் இல்லையெனில் ஜிபே மூலம் அனுப்பலாம் எனவும் அவர் தெரிவித்ததாக தகவல்.

இதையடுத்து அமைச்சர் ரூ.1,000-ஐ ஆன்லைனில் அனுப்பி, குறுக்கு வழியாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த ஓய்வுபெற்ற படை வீரர்கள் இருவர் பூட்டப்பட்டிருந்த இரும்புக் கதவுகளைத் திறந்து வழியளித்ததாகவும் கூறப்படுகிறது.

உள்ளே சென்ற பின் அமைச்சர் மாஸ்கை கழற்றி தன் அடையாளத்தை வெளிப்படுத்தி, “இப்படி பணம் வசூல் செய்யலாமா?” என கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில், லஞ்சம் பெற்றதாக கூறப்படும் அர்ச்சகருக்கு கோவிலில் பூஜை மற்றும் கைங்கர்யப் பணிகள் செய்ய தடை விதிக்கப்பட்டது; உடந்தையாக இருந்த இரு பாதுகாவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த திடீர் ஆய்வுக்கும் உடனடி நடவடிக்கைக்கும் பக்தர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும், வைகாசி விசாகம் திருவிழா காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், அமைச்சர் அன்னதானக் கூடத்தையும் ஆய்வு செய்து பக்தர்களுடன் காலை உணவு எடுத்துக் கொண்டதாகவும், பின்னர் இணை கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் செய்தி கூறுகிறது.