பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க விரிவான வழிகாட்டு விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த தகவல், கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் போது முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் கார்த்திக் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விஷ்வ ஹிந்து பரிஷத் வட தமிழ்நாடு தலைவர் பி. சொக்கலிங்கம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “சுதந்திரமான, வெளிப்படையான விசாரணை”க்காக மூத்த போலீஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்றும், வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், இது மிகக் கொடூரமான சம்பவம் என்றும், சிறந்த காவல் பணிகள் மேற்கொண்டாலும் சில நேரங்களில் இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க முடியாமல் போகலாம் என்றும் வாதிட்டார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களை நீக்க அமெரிக்காவை சேர்ந்த இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை அணுகியுள்ளதாகவும், அவற்றை நீக்க குறைந்தபட்சம் ஏழு நாட்கள் ஆகலாம் என்றும் தெரிவித்தார்.
நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, விசாரணையை எவ்வாறு நடத்த வேண்டும் என்று போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், விசாரணை சரியான பாதையில் செல்கிறது என்றும் குறிப்பிட்டது. மனு தொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.





