காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களை துணை மின் நிலையங்களுடன் இணைப்பது தொடர்பான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கவோ, அதனுடன் தொடர்புடைய ஆவணங்களில் கையெழுத்திடவோ கூடாது என, மரபுசாரா மின்சார பிரிவின் மேற்பார்வை பொறியாளர்களுக்கு தமிழக பசுமை எரிசக்தி கழகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு சாதகமான சூழல் இருப்பதால் தனியார் நிறுவனங்கள் காற்றாலை, சூரிய மின் நிலையங்களை அமைத்து வருகின்றன. வழக்கமாக, திட்டத்தை அமைக்க விரும்புவோர் இடத்தைத் தேர்வு செய்து, அருகிலுள்ள துணை மின் நிலையத்துடன் இணைக்க இயலுமா என்பதை ஆய்வு செய்து தர மின் வாரியத்தின் பசுமை எரிசக்தி பிரிவில் விண்ணப்பிக்க வேண்டும்.

மின் நிலையம் அமைந்த பின், மின்சாரப் பணிகள் சரியாக உள்ளனவா என்பதை தலைமை மின் ஆய்வாளர் அலுவலக அதிகாரிகள் சரிபார்த்து ஒப்புதல் அளிப்பர். அதன் பின்னர் உற்பத்தி மின்சாரத்தை வழங்க துணை மின் நிலையத்தில் இணைக்க மின் வாரியம் இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும்.

இந்த நிலையில் வெளியான உத்தரவால், ஏற்கெனவே கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதலீட்டாளர்கள் தெரிவித்தனர். ஒரு மெகா வாட் சூரிய மின் நிலையத்திற்கு சராசரியாக ரூ.4 கோடியும், ஒரு மெகா வாட் காற்றாலைக்கு ரூ.7 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விண்ணப்ப கட்டத்தில் மெகா வாட்டிற்கு ரூ.25 லட்சம் வழங்கியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

சூரிய ஒளி அதிகமாக இருக்கும் காலமும், காற்றாலை சீசன் தொடங்கும் நேரமும் என்பதால் இந்த உத்தரவு மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறினர். அவர்களின் தகவலின்படி, 736.50 மெகா வாட் திறன் சூரிய மின் நிலையங்களை இணைக்க 226 நிறுவனங்களுக்கும், 400 மெகா வாட் திறன் காற்றாலைகளை இணைக்க நான்கு நிறுவனங்களுக்கும் இணைப்பு ஒப்புதல் நிலுவையில் உள்ளது; இதனால் புதிய முதலீடுகள் பாதிக்கப்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.