கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே முன்மொழியப்பட்ட மேகதாது அணை விவகாரத்தை சட்டப்படி அணுகி, கட்டுமான முயற்சிகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை (DPR) தாக்கல் செய்ய மட்டுமே உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக கூறினார். அதைக் கடந்து அணை கட்ட ‘பூமி பூஜை’ நடத்துவோம் என கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சரும் துணை முதல்வருமான சிவகுமார் தெரிவித்திருப்பது அனுமதியை மீறுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேகதாது அணை கட்ட தமிழக முதல்வர் விஜய் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்றும், சட்ட வழிமுறைகளின் மூலம் அதைத் தடுப்போம் என்றும் நிர்மல் குமார் கூறினார். ‘பூமி பூஜை’ நடத்த தடை கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்; தேவையெனில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி ஆலோசனைகள் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அரசியல் காரணங்களுக்காக இரு மாநிலங்களுக்கிடையே சட்டம்-ஒழுங்கு பிரச்னை உருவாகும் வகையில் கர்நாடக துணை முதல்வர் நடந்து கொள்வதாக கூறி அவர் கண்டனம் தெரிவித்தார். மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளை தீர்க்க நீதிமன்றங்கள் உள்ள நிலையில், தன்னிச்சையாக செயல்படுவது பொறுப்பற்றதும் கண்டிக்கத்தக்கதுமெனவும் அவர் கூறினார்.





