தற்போதைய போர் நிறுத்தத்தை நீட்டித்து, ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான புதிய சுற்று பேச்சுக்களை தொடங்க அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஈரானை மையமாகக் கொண்ட மோதலை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி இறுதியில் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் உச்சத்தை எட்டிய நிலையில், அமைதி ஒப்பந்த முயற்சிக்காக கடந்த மாதம் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பாகிஸ்தானில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சு வெற்றியடையவில்லை; இரண்டாம் கட்ட பேச்சுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கத்தார் மத்தியஸ்தத்துடன் இருதரப்பும் மீண்டும் பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தற்காலிக புரிந்துணர்வின் படி, போர் நிறுத்தம் மேலும் 60 நாட்கள் நீட்டிக்கப்படவும், அணுசக்தி தொடர்பான புதிய பேச்சுகள் தொடங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரான் தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை; மேலும் இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளிப்பாரா என்பது தெளிவாகவில்லை.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் சுங்க வரி வசூலிக்கக் கூடாது என்றும், அங்கு உள்ள அனைத்து கண்ணி வெடிகளையும் 30 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்றும் தற்காலிக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





